உத்தமபாளையம் அருகே வாலிபர் சரமாரி குத்திக்கொலை
உத்தமபாளையம் அருகே வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குத்திக்கொலை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை அணைமேடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கோம்பை அரண்மனை வடக்கு தெருவில் அவர் வந்தபோது, மர்மகும்பல் வழிமறித்து தகராறு செய்தது.
மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மாட்டு வண்டியின் அச்சாணியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினர். மேலும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு பொருட்களை வைத்தும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், நிலைகுலைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
5 பேரிடம் விசாரணை
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.