இளம்பெண்ணை தூக்கியபடி வலம் வந்த வாலிபர்

சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் அலேக்காக தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-08-01 18:45 GMT

நாகர்கோவில்:

சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் அலேக்காக தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்கள்

நாட்டில் சமூக வலைத் தளங்களின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களும், இளம்பெண்களும் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுவது, வசனம் பேசுவது போன்ற வீடியோக்களை ரீல்ஸ்சாக வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பாடலுக்கு நடனமாடுவது சலித்து போனதால் "பிராங் சோ" என்ற பெரில் பொதுமக்களை ஏமாற்றுவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கினர். தற்போது அதையும் தாண்டி பொது இடங்களில் அநாகரிகமாக ரீல்ஸ் பதிவு செய்யும் வழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதே போன்ற ஒரு சம்பவம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை அரங்கேறியது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து மாணவ-மாணவிகளும், ஆண்களும், பெண்களும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் அங்கு வந்தனர்.

அத்துமீறும் செயல்

பின்னர் அந்த ஜோடி அத்துமீறும் செயல்களில் ஈடுபட தொடங்கியது. அதாவது இளம்பெண்ணை, அந்த வாலிபர் கையில் அலேக்காக தூக்கியபடி நடந்து சென்றார். சிரித்தபடியும், அந்த இளம்பெண்ணை கொஞ்சியபடியும் தூக்கிச் சென்றார். அதை ஒருவர் வீடியோ பதிவு செய்தார். இந்த செயல் அத்துமீறும் வகையில் இருந்ததால் பொதுமக்கள் முகம் சுளித்தனர்.

முதலில் அந்த இளம் ஜோடிகளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சினிமா சூட்டிங் நடப்பதாக கருதினர். ஆனால் அவர்கள் சினிமா ஷூட்டிங் நடத்தவில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதை தெரிந்து கொண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து திருமணம்

அதைத் தொடர்ந்து விசாரித்ததில் இளம்பெண்ணும், வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், வெறும் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதுபோன்ற செயல்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்