போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை; உறவினர்கள் போராட்டம்

வத்தலக்குண்டு அருகே மின்கம்பிகள் திருடிய வழக்கில் சிக்கிய வாலிபர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-08-11 21:00 GMT

வத்தலக்குண்டு அருகே மின்கம்பிகள் திருடிய வழக்கில் சிக்கிய வாலிபர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை அடுத்த பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 57). இவர் விருவீடு அருகே வடக்கு வலையபட்டியில் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் அந்த தென்னந்தோப்பில் இருந்த மின் மோட்டார் கம்பிகள் மற்றும் மின்கம்பிகள் திருடுபோனது. இதுகுறித்து விசாரித்தபோது, அவற்றை திருடியது வடக்கு வலையபட்டியை சேர்ந்த புல்லான் மகன் பழனிக்குமார் (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கம்பிகள் திருடியது குறித்து பழனிக்குமார் மீது சின்னச்சாமி விருவீடு போலீஸ் நிலையத்தில் கடந்த 1-ந்தேதி புகார் அளித்தார். அதன்பேரில் பழனிக்குமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

வாலிபர் தற்கொலை

இதற்கிடையே கடந்த 7-ந்தேதி மீண்டும் அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்தனர். அப்போதும் அவர் போலீஸ் நிலையத்துக்கு செல்லவில்லை. மாறாக அன்றைய தினம் போலீஸ் விசாரணைக்கு பயந்து பழனிக்குமார் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை விருவீடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திருட்டு புகார் கொடுத்த சின்னச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோஷமிட்டனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்