கடனை அடைக்க மூதாட்டியிடம் சங்கிலி பறித்த பட்டதாரி வாலிபர்

வாங்கிய கடனை அடைக்க மூதாட்டியிடம் சங்கிலி பறித்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-31 05:58 GMT

சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் ரமீலா (வயது 72). இவர் பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றார். ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்றபோது மர்ம ஆசாமி ஒருவர் மூதாட்டி ரமீலா கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டார். இது பற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தார்.

பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் மேரி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக ஆலந்தூரில் சந்தேகப்படும்படியாக சுற்றிய நெய்வேலியை சேர்ந்த பட்டதாரியான பாலா (25) என்பவரை பிடித்து விசாரித்த போது, மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததை ஒப்புக்கொண்டார்.

கடனை அடைக்க...

மேலும்் விசாரணையில், கட்டிட வரைபடம் தயாரிக்கும் தொழில் செய்து வந்த பாலா, செல்போன் செயலி மூலம் பெற்ற கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டியாக ரூ.2 லட்சம் வரை கடன் ஆனதால் அதனை அடைக்க நண்பரை பார்க்க வந்த இடத்தில் மூதாட்டியிடம் சங்கிலியை பறித்ததாக கூறினார். பாலாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிராம் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

கடனை அடைப்பதற்காக முதல் முறையாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பாலாவுக்கு போலீசார் அறிவுரை கூறினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்