ஹிஜாப் அணிந்து வந்த இளம்பெண் இந்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே ஹிஜாப் அணிந்து வந்த இளம்பெண் இந்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-20 11:33 GMT

திருவண்ணாமலை அருகே ஹிஜாப் அணிந்து வந்த இளம்பெண் இந்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி தேர்வுகள்

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ்நாடு தட்சிண பாரத இந்தி பிரசார சபா சார்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் செங்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த இந்தி தேர்வினை எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்த இந்தி தேர்விற்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4.30 வரையும் தேர்வு நேரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அரபி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த முஸ்லிம் இளம்பெண் தேர்வு எழுத வந்துள்ளார்.

வாக்குவாதம்

அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற அவர் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு 10 நிமிடங்கள் தேர்வு எழுதி கொண்டிருந்த போது தேர்வறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என கூறியதாக தொிகிறது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தேர்வறையின் உள்ளேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் இளம்பெண்ணிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது, இல்லையென்றால் வெளியே சென்று விடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பள்ளி முற்றுகை

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.டி.பி.ஐ. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து வந்து தேர்வு எழுத வந்த இளம்பெண்ணிடமும், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் தேர்வு எழுத மதியம் நேரம் ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் தேர்வு எழுதாமல் சென்று விட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்