கணவர் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - உடலில் மண்எண்ணெய் ஊற்றி மிரட்டியபோது விபரீதம்

கணவர் குடிப்பழக்கத்தை விடும்படி உடலில் மண்எண்ணெய் ஊற்றி மிரட்டியபோது எதிர்பாராத விதமாக உடலில் தீப்பிடித்து காதல் திருமணம் செய்த இளம்பெண் பலியானார்.;

Update: 2023-08-05 08:36 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த நிகிதா (26) என்பவரை காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

தாசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தை விடும்படி நிகிதா கணவரிடம் பல முறை அறிவுறுத்தினார். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி தாஸ் மீண்டும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிகிதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி கொண்டு நீ குடிப்பழக்கத்தை விடவில்லை என்றார் கொளுத்திக் கொள்வேன் என கூறி தீக்குச்சியை பற்றவைத்ததாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக நிகிதா உடையில் தீ பிடித்தது. பின்னர் உடல் முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தாஸ் நிகிதாவை காப்பாற்ற முயன்றார். இதில் தாஸ் மீதும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிகிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் தாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்