காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை.. குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.;
கடலூர்,
கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் தமிழ் பிரபாகரன். இவரும், கடலூர் தாழங்குடாவை சேர்ந்த விஜயகுமார் மகள் சந்தியாவும் (வயது 24) காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சந்தியா, வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சந்தியா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயகுமார், கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.