தூக்குப்போட்டு உயிரை மாய்த்த இளம்பெண்

சாகப்போவதாக ‘வாட்ஸ்அப்’பில் ஸ்டேடஸ் வைத்துவிட்டு, தூக்குப்போட்டு இளம்பெண் உயிரை மாய்த்தார்.

Update: 2023-08-26 18:45 GMT

சிவகாசி, 

சாகப்போவதாக 'வாட்ஸ்அப்'பில் ஸ்டேடஸ் வைத்துவிட்டு, தூக்குப்போட்டு இளம்பெண் உயிரை மாய்த்தார்.

குடும்பத்தகராறு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள 56 வீட்டு காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கும் தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்த முருகன் மகள் ஐஸ்வர்யா (வயது31) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலையில் ஐஸ்வர்யா தாமதமாக எழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா தனது வாட்ஸ்அப் ஸ்டேடசில் "நான் சாகப்போகிறேன், பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுங்கள்" என வைத்துள்ளார்.

இந்த வாட்ஸ்அப் ஸ்டேடசை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் பார்த்து இதுகுறித்து ரெங்கராஜுக்கு தெரிவித்துள்ளார். உடனே ரெங்கராஜ் வீட்டிற்கு வந்த போது குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடி கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்களிடம் அம்மா எங்கே? என்று ரெங்கராஜ் கேட்டுள்ளார். அதற்கு குழந்தைகள் அம்மா அறையில் படுத்து தூங்கிக்கொண்டு இருப்பதாக கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ரெங்கராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற,போது, ஐஸ்வர்யா தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஐஸ்வர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபரீத சம்பவம் குறித்து ஐஸ்வர்யாவின் தாய் சீதாலட்சுமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்