அன்பு, அமைதி செழிக்க வேண்டி நாடு முழுவதும் சைக்கிளில் யாத்திரை செல்லும் இளம் தம்பதி
அன்பு, அமைதி செழிக்க வேண்டி மத்திய பிரதேச இளம் தம்பதி நாடு முழுவதும் சைக்கிளில் யாத்திரையாக செல்கின்றனர்.
திண்டுக்கல்,
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ரோகித் (வயது 28). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி அஞ்சலி (22). கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆனது.
அன்பு, அமைதி செழிக்க வேண்டி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள இந்த தம்பதி முடிவு செய்தனர். இதற்காக, கடந்த மாதம் 4-ந்தேதி ஜபல்பூரில் இருந்து 2 பேரும் தனித்தனி சைக்கிளில் புறப்பட்டனர்.
மராட்டியம், கர்நாடகா, கேரளா வழியாக கடந்த வாரம் கோவை வந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக நேற்று பழனி வந்தனர். பழனியில் அடிவாரம், நகர் பகுதியில் சுற்றி வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆயக்குடி அருகே உள்ள கணக்கன்பட்டி சற்குரு ஆலயத்துக்கு சென்றனர். இன்று (திங்கட்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு செம்பட்டி, மதுரை, நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர். இவர்கள் வந்த சைக்கிளில் அன்பு, அமைதி குறித்த வாசகம் அடங்கிய பதாகைளை வைத்திருந்தனர்.
அன்பு, அமைதி செழிக்க...
இந்த சைக்கிள் யாத்திரை குறித்து அவர்கள் கூறும்போது, நாடு முழுவதும் அன்பு, அமைதி செழிக்க வேண்டி இந்த யாத்திரை செல்ல முடிவு செய்தோம். அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 11 வரை சைக்கிளில் செல்வோம். மதியம் 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஓய்வு எடுத்துவிட்டு இரவு 8 மணி வரை சைக்கிளில் செல்கிறோம்.
மக்கள் அதிகம் கூடும் ஆலயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் சுற்றி வருகிறோம். அடுத்த வாரம் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து தூத்துக்குடி, ராமேசுவரம், தஞ்சை, திருவண்ணாமலை சென்று பின்னர் கர்நாடகா, ஆந்திரா செல்ல உள்ளோம் என்றனர்.