சின்னசேலத்தில் தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்:வேலைக்குவர மறுத்ததால் அடித்துக்கொன்றது அம்பலம்:ஒருவர் கைது; மற்றொருவர் விபத்தில் சாவு

சின்னசேலத்தில் தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு வர மறுத்ததால் அவரை 2 பேர் அடித்துக்கொன்றனர். இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் விபத்தில் உயிரிழந்து விட்டதும் தெரியவந்துள்ளது.

Update: 2023-09-07 18:45 GMT

கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ்


சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தோட்டப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து மகன் மணி (வயது 65). தொழிலாளி. இவர் அதே பகுதியில் சாலையோரத்தில் கடந்த 20-ந்தேதி பிணமாக கிடந்தார். இது குறித்து, மணியின் மனைவி லட்சுமி அளித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே அவரது பிரேத பரிசோதனை முடிவில், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விபத்தில் சாவு

அதில் மணியுடன் சுற்றிய தோட்டப்பாடியை சேர்ந்த வடமலை(54), கோவிந்தராஜ்(65) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி கிருஷ்ணாபுரம் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற டிராக்டர் மோதியதில் வடமலை இறந்துவிட்டார்.

இந்த சூழலில் கோவிந்தராஜை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மணியை வடமலை, கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து அடித்துக்கொன்று இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மர வியாபாரி

வடமலை மர வியாபாரி ஆவார். இவரிடம் கோவிந்தராஜ், மணி ஆகியோர் கூலி வேலை செய்தனர். வேலை முடிந்த பின்னர் இவர்கள் ஒன்றாக சேர்ந்து அவ்வப்போது மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், மணிக்கு அவர் வேலை செய்ததற்கான கூலியை வடமலை சரியாக கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் மணி அவரிடம் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்தார். அந்த வகையில் கடந்த 19-ந்தேதி மணியை வடமலை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

மது கொடுத்து தாக்குதல்

இதன் பின்னர், அன்றைய தினம் மாலையில், கோவிந்தராஜ் மணியை மது குடிப்பதற்காக தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு மணி, வடமலை மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து மது குடித்துள்ளார்கள்.

அப்போது ஏன் வேலைக்கு வர மறுக்கிறாய்? என்று மணியிடம் கேட்ட போது, கூலி தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இதில் வடமலை, கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து மணியை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் மறுநாள் காலை கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் மணி இறந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை முடிவு

மணிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், அவர் குடிபோதையில் தான் இறந்து விட்டார் என்று அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் நினைத்து இருந்தனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து, இதில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்