கூடலூர் அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை; 2 பேர் கைது

கூடலூர் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-30 21:00 GMT

கூடலூர் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்விரோதம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் அருண்குமார் என்ற அருண் (வயது 24). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 27-ந்தேதி கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் இறந்துபோன வாலிபர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றார்.

அப்போது அங்கு கருநாக்கமுத்தன்பட்டி யூனியன் பள்ளி தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் கீர்த்தி (25) என்பவரும் வந்தார். அப்போது இறுதிச்சடங்கில் மாலை போடுவது தொடர்பாக அருண்குமாருக்கும், கீர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

மீண்டும் தகராறு

இந்தநிலையில் கீர்த்தி செல்போன் மூலம் அருண்குமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்ததுடன், மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு கீர்த்தி, அருண்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு மிரட்டினார். நேரில் வருமாறு சவால் விட்டார். இதனால் அவர், எங்கு வர வேண்டும் என்று கேட்டார். அப்போது கூடலூரில், குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் வருமாறு கீர்த்தி அழைத்தார்.

அவர் கூறியபடி அருண்குமார் தனது நண்பரான அரவிந்த் என்பவருடன் அங்கு சென்றார். அப்போது அங்கு கீர்த்தி, தனது தம்பி கிரேன் (22), நண்பர் பாண்டியன் (23) ஆகியோருடன் நின்றுகொண்டிருந்தார். அருகில் வந்ததும் அருண்குமாருடன், கீர்த்தி தகராறு செய்து தாக்கினார். இதனை அரவிந்த் தடுக்க முயன்றார். அவரை பாண்டியன் பிடித்துக்கொண்டார்.

படுகொலை

சிறிது நேரத்தில் கீர்த்தியும், கிரேனும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அருண்குமாரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் கீர்த்தி, கிரேன் மற்றும் பாண்டியன் ஆகியோர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

உடனே அரவிந்த் இதுகுறித்து அருண்குமாரின் தந்தை பால்பாண்டிக்கு தகவல் தெரிவித்தார். அவர் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்த அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கீர்த்தி உள்பட 3 பேரையும் தேடினர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கீர்த்தி மற்றும் பாண்டியனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கிரேன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்விரோத தகராறில் ெதாழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்