தண்ணீர் தொட்டிக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி

திருச்சியில் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணமாக கிடந்தார். கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-03 18:36 GMT

திருச்சியில் தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளி பிணமாக கிடந்தார். கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை பிரிந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள மங்கலகுடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). தொழிலாளி. இவருடைய மனைவி ராதா (46). இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து லட்சுமணன் திருச்சி வந்துவிட்டார்.

இதையடுத்து லட்சுமணன் திருச்சி கள்ளர் தெரு காசியாபிள்ளை சந்து பகுதியில் ஒரு வீட்டில் தங்கி, பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஒரு (துணி தேய்க்கும்) அயனிங் கடையில் பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் லட்சுமணன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமணன் மதுபோதையில் வாளியுடன் வீட்டின் மொட்டைமாடிக்கு சென்றார். அப்போது, பக்கத்து வீட்டினர், அவரிடம் கேட்டபோது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் பின் அவரை காணவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது, அவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் இதுபற்றி லட்சு மணனின் மனைவி ராதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் லட்சுமணன் தண்ணீர் தொட்டியை சுத்தப்படுத்த இறங்கிய போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்