விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளிக்கு திடீர் நெஞ்சுவலி; ரெயிலை நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சக பயணிகள்

விழுப்புரம் அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் ரெயிலை நிறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-10-05 18:45 GMT

விக்கிரவாண்டி, 

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுடன் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று காலை 7.40 மணியவில் விழுப்புரம் அடுத்த முண்டியம்மபாக்கம் ரெயில் நிலையம் அருகே ஒரத்தூர் பகுதியில் வரும்போது, தாம்பரம் செல்வதற்காக ரெயிலில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த கட்டிட தொழிலாளியான புஷ்பராஜ்(வயது 38) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பயணிகள் உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடுவழியில் ரெயில் நிற்பதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி, கிறிஸ்டோபர் ஆகியோர் விரைந்து வந்து ரெயில் பயணிகள் உதவியுடன் புஷ்பராஜை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக 10 நிமிடம் தாமதத்துக்கு பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

ஓடும் ரெயிலில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிய கட்டிட தொழிலாளியை சக பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்