துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளி பாம்பு கடித்து சாவு

நாகர்கோவிலில் உடல்நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.;

Update: 2023-07-20 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உடல்நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளி பாம்பு கடித்து பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

தூய்மைப் பணியாளரின் கணவர்

நாகர்கோவில் அருகே உள்ள கீழகோணம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 54). இவருடைய மனைவி முத்துசெல்வம் (51). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மை பணியாளராக முத்து செல்வம் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு பதிலாக பரமசிவன் நேற்று காலை நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியில் சாலையோரம் மண்டிக்கிடந்த புதரை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

பாம்பு கடித்து சாவு

அப்போது புதருக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை கடித்தது. இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாம்பின் விஷம் உடலில் ஏறி பரமசிவன் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகாரி விசாரணை

தூய்மை பணியின் போது தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் மாநகராட்சி ஊழியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதே சமயத்தில் முத்துச் செல்வத்துக்கு பதிலாக அவருடைய கணவர் துப்புரவு பணியில் ஈடுபட்டது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் மாநகர நல அதிகாரி ராம்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்