சரக்கு வேன்-மொபட் மோதல்; தொழிலாளி பலி
எரியோடு அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
எரியோடு அருகே உள்ள பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் மலையாளம் (வயது 52). இவர் அப்பகுதியில் உள்ள டீ கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மலையாளம் நாகையகோட்டையில் உள்ள பாதுசாநகர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேடசந்தூர்-புதுரோடு சாலையை அவர் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் வெல்லம்பட்டியில் இருந்து புதுரோடு நோக்கி வந்த சரக்கு வேன் ஒன்று, மொபட் மீது மோதியது.
இதில், மொபட்டில் இருந்து தூக்கிவீசப்பட்ட மலையாளம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலையாளம் இறந்துபோனார். இதுகுறித்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.