உத்தமபாளையம் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதல்; தொழிலாளி பலி
உத்தமபாளையம் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
உத்தமபாளையம் அருகே மாட்டு வண்டி மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
லாரி மோதல்
கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் போதுமணி (வயது 48). விவசாய கூலித்தொழிலாளியான இவர், ஏர்பூட்டும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வயலில் ஏர்பூட்டி உழவு செய்யும் பணிக்காக மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார்.
ராமசாமிநாயக்கன்பட்டி அருகில், உத்தமபாளையம்-கோகிலாபுரம் சாலையில் அவர் வந்தபோது, பின்னால் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக மாட்டு வண்டி மீது மோதியது. இதில், மாட்டு வண்டியில் வந்த போதுமணி தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதேபோல் வண்டியில் பூட்டப்பட்டிருந்த 2 மாடுகளும் காயமடைந்தன.
தொழிலாளி பலி
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த போதுமணியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி போதுமணி நேற்று இறந்தார். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.