தூக்குப்போட்டு தொழிலாளி சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது

மயிலாடும்பாறை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு இறந்தநிலையில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-12 21:00 GMT

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 47). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் கோவிலாங்குளம் அருகே மூலவைகை ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அழகர்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அழகர்சாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அன்புபாண்டியன் (32) என்பவரது செல்போனை அழகர்சாமி திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அன்புபாண்டியன், தனது உறவினர்களான செல்வேந்திரன் (28), அழகுராஜா (28) ஆகியோருடன் கோவிலாங்குளத்திற்கு உள்ள அழகர்சாமியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மனமுடைந்த அழகர்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அழகர்சாமியின் மகன் பிரவீன் கொடுத்த புகாரின்பேரில், தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புபாண்டியன், செல்வேந்திரன், அழகுராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்