உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் மறியல்

உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் மறியல்

Update: 2022-09-29 14:02 GMT

திருப்பூர்

முத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் பலியானார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றுகூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பாம்பு கடித்து பெண் பலி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி அமுதா (வயது 52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த 22-ந் தேதி சோளக்காட்டிற்கு மருந்து தெளிக்கும் பணியில் அமுதா ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி அமுதா இறந்தார்.

சாலைமறியல்

இதைத்தொடர்ந்து அமுதாவின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்பு திரண்டனர். அமுதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அதனால் அவர் இறந்து விட்டதாக கூறியும், அதற்கு தோட்ட உரிமையாளர் இழப்பீடு வழங்க கோரியும் அரசு மருத்துவமனை முன் உள்ள தாராபுரம் ரோட்டில் மதியம் 12.35 மணிக்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மறியலை கைவிட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த மறியலால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்