ஆற்றில் மிதந்து வந்த பெண் உடல்
அம்மாப்பேட்டை அருகே ஆற்றில் பெண் உடல் மிதந்து வந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே ஆற்றில் பெண் உடல் மிதந்து வந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆற்றில் பெண் பிணம்
தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிராந்தை கிராமம் வழியாக வடவாறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் மிதந்து வந்தது. இது குறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பத்மநாபன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார் சோழன், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
மேலும் அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் முகம் மற்றும் உடல் பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் அந்த பெண்ணை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர்? ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.