மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-25 13:19 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்

. 550-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளி பெண் போராட்டம்

கீழ்பென்னாத்தூர் தாலுகா நாறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், கூலி தொழிலாளி. இவரது மனைவி தீபா, மாற்றுத் திறனாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் தீபா, தனது கணவர் மற்றும் மகள்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது தீபா கையில் நீதி வேண்டும் என்று பதாகையை ஏந்தியபடி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களுக்கு நிலமோ, வீடோ எதுவும் கிடையாது. முன்னாள் கலெக்டர் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். இதில் பசுமை வீடு கட்டி வருகிறோம்.

வீடு கட்டுமான பணி முடியாத நிலையில் அருகில் உள்ளவர்கள் எங்கள் வீட்டுமனையை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து கோட்டாட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் மன உளச்சலில் உள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்று கொண்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மின் கட்டண உயர்வு

தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.தாமோதரன் தலைமையில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஹரி, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண், மாநில நிர்வாகிகள் தினகரன், அறவழி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 3, 4 வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை தரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 6 மாத்திற்கு முன்பு தான் வீட்டு வரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின்சார கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.

ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்