காட்டு யானை விரட்டியதால் அலறி அடித்து ஓடி தப்பிய பெண்

குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை ஒரு பெண்ணை விரட்டியதால் அவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி உயிர்தப்பினார்.

Update: 2022-08-09 17:48 GMT

குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை ஒரு பெண்ணை விரட்டியதால் அவர் அலறி அடித்துக்கொண்டு ஓடி உயிர்தப்பினார்.

ஒற்றை யானை அட்டகாசம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த மோடி குப்பம் அருகே உள்ள மத்தேட்டிபல்லி குடுமிபட்டி பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று சிக்கி பரிதாபமாக இறந்தது. அதனை யாருக்கும் தெரியாமல் நிலத்திலேயே பள்ளம் தோண்டி மின்வேலி அமைத்திருந்தவர் புதைத்து விட்டார்.

இது குறித்து கால தாமதமாக தகவல் அறிந்த வனத்துறையினர் குறிப்பிட்ட நிலத்தில் தோண்டி பார்த்தபோது ஆண் யானை புதைக்கப்பட்டது தெரியவந்தது.இதனிடையே அந்த யானையை ேதடி அதனுடன் ஜோடியாக திரிந்த யானை அப்பகுதியில் வந்து பிளிறியபடி இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் குடுமிபட்டி மற்றும் மத்தேட்டிபல்லி கிராமத்திற்கு ஒற்றையாக வந்த அந்த யானை தனது ஜோடி யானை மின்வேலியில் சிக்கி இறந்த பகுதிக்கு சென்று சுற்றி சுற்றி வந்துள்ளது.

பெண்ணை விரட்டியது

அதனை தொடர்ந்து மத்தேட்டிபல்லி கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற பெண்ணை அந்த ஒற்றை யானை விரட்டி உள்ளது. அதனிடமிருந்து தப்பித்தவாறு அலறி அடித்துக் கொண்டு ஓடிய அந்த பெண் கிராம மக்களிடம் யானை குறித்து கூறியுள்ளார்

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இருப்பினும் கிராம மக்கள் தூங்காமல் விடிய விடிய அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ''ஒற்றை யானை மின்வேலியில் சிக்கி இறந்த சம்பவத்தை தொடர்ந்து அடிக்கடி அதனுடைய ஜோடியாக திரிந்த ஒற்றை யானை இரவு நேரங்களில் தேடி வருகிறது.

அந்த யானை மூர்க்கத்தனமாக விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகிறது. கிராம மக்களை விரட்டுகிறது இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து யானை வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்