நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பை பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ் (வயது 45). இவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர் அவர் குறைதீர்க்கும் கூட்ட அரங்கின் வாசல் அருகே தலைமுடியில் கட்டும் ரிப்பனை எடுத்து தனது கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து மீட்டனர். ஆனால் அவர் தனது சேலை முந்தானையால் கழுத்தை இறுக்கி மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்த போது, மும்தாஜ் அம்பையில் உள்ள சொத்து பிரச்சினை காரணமாக மனு கொடுக்க வந்திருந்த நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும், ஏற்கனவே நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.