காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை;ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை
பெருந்துறையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை
பெருந்துறையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவரது மனைவி கவுதமி (22). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் திருப்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜீவிதா (2) என்கிற பெண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் கவுதமியின் வீட்டுக்கு மட்டும் தெரிந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தான் மணிகண்டன் காதல் திருமணம் செய்து கொண்ட தகவலை ஈரோடு மாவட்டம் பெருந்துறை கள்ளியம்புதூரில் வசிக்கும் அவரது அக்காள் பவித்ராவுக்கு தெரிவித்துள்ளார்.
தூக்கில் தொங்கினார்
இதைத்தொடர்ந்து பவித்ரா தனது தம்பி மணிகண்டனையும், கவுதமியையும் பெருந்துறையில் உள்ள தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து மணிகண்டனும், கவுதமியும் நேற்று பவித்ராவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு 3 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா "எங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், நீங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது சரியா?" என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கவுதமி உடனே பவித்ராவின் வீட்டு குளியல் அறைக்கு சென்று அங்குள்ள விட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார். குளியலறைக்குச் சென்ற கவுதமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பவித்ரா அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
சாவு
உடனே கவுதமியை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கவுதமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கவுதமிக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகளுக்குள் இருப்பதால் ஈரோடு ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.