அரசு பஸ்சில் ரூ.10 ஆயிரம் தவற விட்ட பெண்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் ரூ.10 ஆயிரத்தை பெண் ஒருவர் தவற விட்டார். அதனை கண்டக்டர் எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்தார். அவரை அதிகாரிகள் பாராட்டினர்.

Update: 2022-11-02 18:45 GMT

நாகர்கோவில்:

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் ரூ.10 ஆயிரத்தை பெண் ஒருவர் தவற விட்டார். அதனை கண்டக்டர் எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்தார். அவரை அதிகாரிகள் பாராட்டினர்.

பஸ்சில் தவற விட்ட பணம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை வந்தடைந்ததும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் இறங்கினர்.

அப்போது பஸ்சின் முன் இருக்கை அடியில் ஒரு மணி பர்ஸ் இருந்தது. அதனை பஸ் கண்டக்டர் கண்டார். உடனே அதனை திறந்து பார்த்ததில் ரூ.10,600 மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு இருந்தது.

உடனே பஸ் கண்டக்டர் அந்த பர்சை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த பர்சை யாரும் உரிமைக்கோரி வரவில்லை. இதனை தொடர்ந்து பர்சை உரியவரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

உரியவரிடம் ஒப்படைப்பு

அதன்படி பர்சில் ஆதார் கார்டில் குறிப்பிட்டு இருந்த முகவரியை பார்த்தனர். அதில் வள்ளியூர் அருகே ஆனைகுளம் பகுதியை சேர்ந்த சுகன்யா ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது சுகன்யா ஜெயக்கொடி பர்சை தவற விட்டு பல இடங்களில் தேடியதாக தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரை நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

பின்னர் அவரிடம் மணி பர்சிற்கான அடையாளங்களை கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து சுகன்யா ஜெயக்கொடியிடம் எழுதி வாங்கி விட்டு பர்சை அவரிடம் ஒப்படைத்தனர். தவற விட்ட பணம் கிடைத்த மகிழ்ச்சியில் சுகன்யா ஜெயக்கொடி அதிகாரிகளுக்கு நன்றி கூறினார். அதே சமயத்தில் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க காரணமான கண்டக்டரின் நேர்மையை அதிகாரிகள் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்