காட்பாடி ரெயில் நிலையத்தில் பெற்ற பெண் குழந்தையை மூதாட்டியிடம் அனாதையாக விட்டு சென்ற பெண்
காட்பாடி ரெயில் நிலையத்தில் பெற்ற பெண் குழந்தையை மூதாட்டியிடம் அனாதையாக விட்டுச் சென்ற பெண் கணவருடன் ஆட்டோவில் தப்பினார்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் பெற்ற பெண் குழந்தையை மூதாட்டியிடம் அனாதையாக விட்டுச் சென்ற பெண் கணவருடன் ஆட்டோவில் தப்பினார்.
கல் நெஞ்சம் படைத்த தாய்
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரி (வயது 63). இவர் நேற்று ேசலம் செல்வதற்காக காட்பாடி ரெயில் நிலையத்தில் நடை மேடை எண் ஒன்றில் ரெயிலுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கை குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையை கொடுத்து விட்டு 5 நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதியிடம் குழந்தையை ஒப்படைத்தார்.
கண்காணிப்பு கேமரா
அதனையடுத்து காட்பாடி ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் சிறிது நேரம் நடைமேடையை வலம் வரும் பெண், 6 மாத பெண் குழந்தையை மூதாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக, வேகமாக ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற பெண் மற்றும் அவர் கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பெண் குழந்தையை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
தான் பெற்ற குழந்தையையே ரெயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச்சென்ற அந்தக் கல் நெஞ்சம் படைத்த பெண் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.