திண்டுக்கல் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-12-13 17:02 GMT

மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் போலீஸ் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகள் காதல் திருமணம்

திண்டுக்கல் மருதாணிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 45). இவர்களது மகள் திவ்யா (20), திண்டுக்கல்-தாடிக்கொம்பு சாலையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற திவ்யா திரும்பி வரவில்லை. இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திவ்யா, அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்ற வாலிபரை காதல் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது திவ்யா தனது காதல் கணவருடன் செல்வதாக கூறினார். மேலும் 2 பேரும் திருமண வயதை எட்டிவிட்டதால் அவர்களின் விருப்பபடி வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் திவ்யாவின் தாயார் ராஜகுமாரி இன்று திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது தனது மகள் திவ்யாவை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, தன்னோடு அனுப்பி வைக்கும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் திவ்யா காணாமல் போனது, காதல் திருமணம் செய்தது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தியதால், அங்கு சென்று முறையிடும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

அப்போது ராஜகுமாரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்