கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மோட்டார் சைக்கிளை திருப்பி தரக்கோரி கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-20 19:08 GMT

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பனங்குளம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 45). இவரது மகன் விக்ரம் (20) மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என 3 பேரும் சேர்ந்து பனங்குளம் தெற்கு கடைவீதியில் உள்ள பெட்டிக்கடையில் நள்ளிரவில் தூங்கிய முதியவர்களை எழுப்பி சிகரெட் கேட்டு தாக்கியதாக கடந்த மாதம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆவணத்தான்கோட்டையை சேர்ந்த ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்து, ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று விக்ரம் ஓட்டி செல்லவில்லை. அதனால் அந்த மோட்டார் சைக்கிளை வழக்கில் சேர்க்காமல் திருப்பி தர வேண்டும் என்று விஜயா கீரமங்கலம் போலீஸ் நிலையம் சென்று பல முறை கேட்டும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த விஜயா திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்துக் கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்