மேம்பாலத்தில் இருந்து குதித்து மற்றொரு மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
விருதுநகரில் மூத்த மகளை தாக்கி வீட்டில் பூட்டி வைத்து விட்டு ெரயில்வே மேம்பாலத்தில் இளைய மகளுடன் தற்கொலைக்கு பெண் முயன்றார்.;
விருதுநகரில் மூத்த மகளை தாக்கி வீட்டில் பூட்டி வைத்து விட்டு ெரயில்வே மேம்பாலத்தில் இளைய மகளுடன் தற்கொலைக்கு பெண் முயன்றார்.
மகள் மீது தாக்குதல்
விருதுநகர் அல்லம்பட்டி கவர நாயுடு காலனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 40). கூலி தொழிலாளியான இவரது மனைவி ஜான்சி ராணி(38). இவர்களுக்கு மோனிகா(12), ரித்திகா மேரி (9) என 2 மகள்கள் உள்ளனர். மோனிகா 6-ம் வகுப்பும், ரித்திகா மேரி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
அந்தோணிராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் மோனிகா தனது தந்தைக்கு ஆதரவாக பேசியதால் ஆத்திரம் அடைந்த ஜான்சிராணி மோனிகாவை கரண்டியால் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மோனிகாவை, ஜான்சி ராணி வீட்டில் பூட்டிவைத்துவிட்டு ரித்திகா மேரியுடன் வெளியே கிளம்பினார்.
தற்கொலை முயற்சி
ஜான்சி ராணி, ரித்திகா மேரியுடன் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ெரயில்வே மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ரித்திகா மேரி கூச்சல் போட்டார். உடனே மேம்பால படியிலிருந்து ஜான்சி ராணி, ரித்திகா மேரியுடன் கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்நகர் கிழக்கு போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து ஜான்சிராணியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மோனிகா வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் மோனிகாவை மீட்டு அவளையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.