காரில் வந்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்

மங்கலம் அருகே காரில் வந்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-23 16:49 GMT

கலசபாக்கம்

மங்கலம் அருகே காரில் வந்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மர்ம பெண்

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளான நல்லவன்பாளையம், கருங்காலிகுப்பம், காஞ்சி, பெரியகிளாம்பாடி உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் தனிமையில் வசிக்கும் பெண்களை குறி வைத்து அவர்களின் குடும்ப விஷயங்களைத் தெரிந்து கொண்டு மர்ம பெண் காரில் வந்து உறவினர்கள் போல் பேசி நகைகளை திருடி செல்கிறார்.

அப்போது அந்த பெண் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி நகை மற்றும் பணம் திருடி கொண்டு காரில் தப்பி செல்கிறார்.

இது சம்பந்தமாக அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து அந்த மர்ம பெண் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. ஆனால் இதுவரை மர்மபெண் போலீசாரிடம் சிக்கவில்லை.

சிறப்பு பூஜை

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் அருகே வேடந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட அரியாங்குப்பம் கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் லலிதா (வயது 82) என்பவர் தனிமையில் வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். கார் டிரைவராக உள்ள இவரது மகன் ஜெயபிரகாஷ் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி காலை லலிதாவின் வீட்டின் முன்பு திடீரென ஒரு கார் வந்து நின்றது.

இதில் இருந்து ஒரு பெண் இறங்கி இரும்புகேட்டை திறந்து கொண்டு உள்ளே வேகமாக வந்தார். இதை பார்த்த லலிதா யார்? எதற்காக வருகிறாய்? என்று கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாமல் அந்த பெண் உள்ளே வந்து குடும்பத்தினரின் பெயரை சொல்லி அவர் தான் அனுப்பி வைத்துள்ளார். தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைக்காக சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.

10 பவுன் நகை திருட்டு

இதற்கு லலிதா மறுத்து நான் தற்போது தான் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாமி கும்பிட்டு உள்ளேன். அதனால் எந்த பூஜையும் வேண்டாம் என்றார். அதற்கு அந்த பெண் மிரட்டும் தோனியில் பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனால் பயந்து போன லலிதா ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு கழுத்தில் அணிந்து இருந்த நகையை கழட்டி சாமி படம் முன்பு வைக்குமாறு அவர் கூறினார். இதையடுத்து தான் அணிந்து இருந்த 6½ பவுன் சங்கிலி, தங்க வளையல்களை உள்பட 10 பவுன் நகைகளை கழட்டி சாமி படத்துக்கு முன்பு வைத்துள்ளார்.

அப்போது அந்த பெண் கற்பூரம் ஏற்றி காண்பிக்குமாறு கூறிவிட்டு வெளியில் வந்தார்.

லலிதா வீட்டிற்கு வெளியில் வந்தவுடன் அந்த பெண் வீட்டுக்குள் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்று சாமி படத்துக்கு முன்பு இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு காரில் வேகமாக சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா கூச்சல் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரில் தப்பி சென்றவரை பின்தொடர்ந்து துரத்தினர். ஆனால் அவர்களால் பிடிக்க முடியவில்லை.

பின்னர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்ைக எடுக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இதேபோன்று திருட்டு சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

தனிமையில் உள்ள பெண்களும், வயதான ஆண்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மர்ம பெண்ணை பிடிக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்