குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற பெண்

சென்னை விருகம்பாக்கத்தில் குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு போராடிய கணவரை 2 நாட்களாக வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

Update: 2023-01-12 23:10 GMT

விருகம்பாக்கம்,

சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர், கே.கே.சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி (37). இவர், வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

நேற்று முன்தினம் வினோதினி, தனது கணவர் வேல்முருகனை, வீட்டில் குடிபோதையில் தவறி விழுந்து விட்டதால் காயம் ஏற்பட்டதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வேல்முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரது உடலில் கத்திக்குத்து காயம் இருப்பதையும் கண்டனர். இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான போலீசார், வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வேல்முருகனின் மனைவி வினோதினியிடம் விசாரணை செய்தனர். அவர் போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். போலீசார் துருவி, துருவி விசாரணை செய்ததில் தனது கணவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

வேல்முருகன் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன், குடிபோதையில் சாக்கடையில் விழுந்து எழுந்து வீட்டுக்கு வந்தார். அவரை வினோதினி தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி வீட்டில் அமர வைத்திருந்தார்.

வீட்டில் வைத்து சிகிச்சை

போதை தெளிந்ததால் வேல்முருகன் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். மேலும் வீட்டிலேயே அசுத்தம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, கத்தியை நெருப்பில் காய்த்து வேல்முருகனின் உடலில் சூடு வைத்தார். இதில் வலி தாங்காமல் துடித்த வேல்முருகன், மனைவியை தாக்கினார்.

இதில் மேலும் ஆத்திரம் அடைந்த வினோதினி நெருப்பில் காய்ச்சி சூடாக இருந்த கத்தியால் 2 முறை வேல்முருகனை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன், மயங்கினார். உயிருக்கு போராடிய கணவரை, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று அஞ்சிய வினோதி, இதுபற்றி வெளியே யாருக்கும் சொல்லாமல் 2 நாட்களாக வீட்டில் வைத்தே கணவருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

நாடகமாடினார்

ஆனால் நேற்று முன்தினம் வேல்முருகன் பேச்சுமூச்சு இன்றி உடல் அசைவற்று கிடந்தார். இதனால் பயந்துபோன வினோதினி, ஆம்புலன்ஸ் மூலம் கணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்ததும், டாக்டர்களிடம் குடிபோதையில் தனது கணவர் வீட்டில் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் நாடகமாடியதும் தெரியவந்தது.

ஆனால் கத்தியால் குத்தப்பட்ட காயத்தை வைத்து போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்ததால் போலீசாரிடம் சிக்கிவிட்டார்.

கணவரை கத்தியால் குத்திக்கொலை செய்த வினோதினியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்