வீடுகளில் ரகசிய குறியீடு போட்ட வடமாநில பெண்
நித்திரவிளை அருகே வீடுகளில் ரகசிய குறியீடு போட்ட வடமாநில பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே வீடுகளில் ரகசிய குறியீடு போட்ட வடமாநில பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ரகசிய குறியீடு
நித்திரவிளை அருகே நம்பாளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அவர் செல்லும் ஒரு சில வீடுகளின் முன்பக்கம் உள்ள இரும்பு கேட்களில் ரகசிய குறியீடாக கோடுகளை இட்டு சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது, அந்த பெண் கன்னடத்தில் பேசியதால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் அந்த பெண்ணை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
வடமாநில பெண்
இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், அந்த பெண்ணிடம் இருந்த கைப்பையில் கறுப்பு மை போன்றவை இருந்துள்ளது. மேலும், விசாரணையில் அந்த பெண் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும், குழித்துறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் தெரியவந்தது. தினமும் ஒவ்வொரு வீடாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கைரேகை பதிவுகளை வாங்கி வைத்துக்கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் குறியீடுகள் போட்டு சென்று இரவு நேரத்தில் அந்த வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.