சாலை விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த பெண் பலி
சாலை விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த பெண் பலியானார்.
புதுச்சேரி ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சேகர் (வயது 67). இவரது மனைவி மகாலட்சுமி (66). சுரேஷ் மனைவி லதா (41), இவரது மகள் நிவேதா (9), தனிகைவேலு மனைவி கவிதா (46), கடலூர் மாவட்டம், நல்லத்தூரையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி குணபூசணி (58), புதுச்சேரி ஜெயா நகரை சேர்ந்த முருகையன் (48) ஆகிய 7 பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு புதுச்சேரிக்கு காரில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வழியாக மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையல் சென்று கொண்டிருந்தனர். காரை முருகையன் ஓட்டினார். விராலிமலை அருகே உள்ள மேலபச்சக்குடி கலிங்கி அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் பாலம் கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த மண் மேட்டில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த குணபூசணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சேகர், மகாலட்சுமி, கவிதா, லதா, நிவேதா, முருகையன் ஆகிய 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் குணபூசணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.