உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பெண் கவுன்சிலர்
உண்ணாமலைகடை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பெண் கவுன்சிலர்
குழித்துறை,
உண்ணாமலைக்கடை 17-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஷீஜாகுமாரி. இவர் தனது வார்டுக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாகவும், சாலை பராமரிப்பு பணிகள் செய்யாததை கண்டித்தும் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி தலைவர் பமலா அலுவலகத்திற்கு வந்து கவுன்சிலர் ஷீஜாகுமாரியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவி பமலா கூறும்போது, 'கவுன்சிலர் ஷீஜாகுமாரி குறிப்பிட்டுள்ள பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டார் பழுதாகி உள்ளதால் சில நாட்கள் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. நாளை (அதாவது இன்று) காலை முதல் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
உண்ணாமலைகடை பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் கொடுத்த பிறகு சாலை பராமரிப்பு பணிகள் செய்யப்படும்' என்றார்.