கள்ளக்காதலனுடன் செல்ல குடும்பத்தினர் அனுமதிக்காததால்-விஷம் குடித்து பெண் தற்கொலை
கள்ளக்காதலனுடன் செல்ல குடும்பத்தினர் அனுமதிக்காததால், ஊட்டியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி
கள்ளக்காதலனுடன் செல்ல குடும்பத்தினர் அனுமதிக்காததால், ஊட்டியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்காதலனுடன் செல்ல முடிவு
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் அந்த இளம்பெண் குன்னூருக்கு வந்து விட்டார்.
இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு ஊட்டி அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண், எமரால்டு பகுதியை சேர்ந்த வாலிபருடன் சேர்ந்து வாழ விரும்பினார்.
விஷம் குடித்து தற்கொலை
ஆனால் இதற்கு பெண்ணின் சகோதரி மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விவாகரத்து வாங்காமல் இதுபோல் மற்றொரு வாலிபருடன் பழகக்கூடாது, கணவருடன் சேர்ந்து வாழுமாறும் அறிவுரை வழங்கினர். ஆனால் அந்த இளம் பெண் குடும்பத்தினரின் அறிவுரை எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.
இதையடுத்து அந்த இளம்பெண் கடந்த 5-ந் தேதி, தன் மனதுக்குப் பிடித்த வாலிபரை நேரில் பார்த்து பேசுவதற்காக, ஊட்டி காந்தல் குருசடி காலனி தேவாலயம் பகுதிக்கு வர சொன்னார். ஆனால் அங்கு செல்வதற்கு முன்னர் இளம்பெண் விஷம் குடித்துவிட்டு சென்றதால் குருசடி காலனி தேவாலய பகுதியில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த இளம்பெண் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அங்கு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, சப்- இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.