பசுமாடுகளுடன் வந்து மனு கொடுத்த பெண்

கலெக்டர் அலுவலகத்துக்கு பசுமாடுகளுடன் வந்து பெண் ஒருவர் மனு கொடுத்தார்.

Update: 2022-09-19 19:00 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு, பசு மாடுகளுடன் மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர்.

அப்போது திண்டுக்கல்லை அடுத்த புகையிலைபட்டியை சேர்ந்த ஆரோக்கியஜென்சி தனது 2 பசுமாடுகளை அழைத்து வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்களுடைய விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் சிலர் எங்களுடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதுபற்றி கேட்ட போது என்னையும், வயதான எனது பெற்றோரையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து இருப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி...

நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைக்கோட்டையை அடுத்த ஜே.ஊத்துப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் எங்கள் ஊரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவை இல்லை. மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் செல்ல வேண்டியது இருக்கிறது. எனவே சுகாதார நிலையம் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

பட்டிவீரன்பட்டியை ரமேஷ்பாபு என்பவர் கொடுத்த மனுவில், பட்டிவீரன்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக 40 நாட்களுக்கு மேலாக பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே பேனர்களை அகற்ற வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்