குட்டியுடன் சேர்ந்து மரத்தை ரோட்டில் சாய்த்த காட்டுயானை
குட்டியுடன் சேர்ந்து மரத்தை ரோட்டில் காட்டுயானை சாய்த்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அந்த வழியாக செல்லும் கரும்பு லாரி டிரைவர்கள், யானைகளுக்காக கரும்பு கட்டுகளை சாலையோரம் போட்டு பழக்கிவிட்டார்கள். இதனால் கரும்புகளை ருசிக்க அடிக்கடி காட்டுயானைகள் நெடுஞ்சாலைக்கு வந்துவிடுகின்றன. மேலும் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளையும் மறித்து, கரும்புகளை ருசிக்கின்றன. அதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
மரத்தை சாய்த்தது
இந்தநிலையில் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று அதிகாலை குட்டியுடன் ஒரு காட்டுயானை கரும்பு லாரியை எதிர்பார்த்து நின்று கொண்டு இருந்தது. ஆனால் நீண்ட நேரமாக கரும்பு பாரம் ஏற்றிய லாரி எதுவும் அந்த வழியாக வரவில்லை. அப்போது திடீரென அந்த காட்டுயானை குட்டியுடன் சேர்ந்து ஒரு மரத்தை முட்டி ரோட்டில் சாய்த்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசனூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டு, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது.