சாலையில் பிளிறியபடி ஓடிய காட்டுயானை

கூடலூரில் சாலையில் பிளிறியபடி ஓடிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டதும், அலறியடித்து வீடுகளுக்குள் பொதுமக்கள் சென்றனர்.

Update: 2023-01-01 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் சாலையில் பிளிறியபடி ஓடிய காட்டுயானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டதும், அலறியடித்து வீடுகளுக்குள் பொதுமக்கள் சென்றனர்.

ஊருக்குள் புகுந்த யானை

கூடலூர் பகுதியில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக பசுந்தீவனங்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது. மேலும் விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. இல்லையெனில் பொதுமக்களின் வீடுகளை உடைத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒரு காட்டுயானை, கூடலூர் நகருக்குள் திடீரென வருகிறது. இதனால் காலை நேரத்தில் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு கூடலூர் எம்.ஜி.ஆர். நகருக்குள் தனியார் தேயிலை தோட்டம் வழியாக காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்தது. அப்போது தெருவில் நடந்து சென்ற பொதுமக்கள் காட்டுயானை வருவதை கண்டு அலறியடித்து ஓடி தங்களது வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டினர். மேலும் அந்த வழியாக கறிக்கோழி ஏற்றி வந்த சரக்கு வேனை தாக்கியது. இதனால் அதில் வந்தவர்கள் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழைகளை காட்டு யானை தின்றது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கிருந்து சென்ற காட்டு யானை, நர்த்தகி பகுதிக்கு வந்தது. தொடர்ந்து கூடலூர்-கோழிக்கோடு சாலையில் பிளிறியபடி ஓடியது. இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காட்டு யானையை கண்டு அலறியடித்து வந்த வழியாக திரும்பி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சாலையில் காட்டுயானை ஓடி முஸ்லிம் அனாதை இல்ல மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன் பின்னரே வாகன போக்குவரத்து சீரானது. மேலும் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூர் நகருக்குள் காட்டு யானை எந்த நேரத்திலும் வருகிறது. இதனால் இரவு, அதிகாலை நேரத்தில் வெளியே நடமாட முடியாமல் உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்