2 கார்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம்

நவமலையில் 2 கார்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

Update: 2023-02-16 18:45 GMT

பொள்ளாச்சி

நவமலையில் 2 கார்களை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கார்கள் சேதம்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, கடந்த சில மாதங்களாக ஆழியாறு, நவமலை பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நவமலை மின்சார வாரிய குடியிருப்புக்குள் அந்த யானை புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது.

இதை அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பார்த்து கொண்டு இருந்தனர். மேலும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து காட்டுயானையை விரட்டினர்.

குழு அமைத்து கண்காணிப்பு

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு, நவமலை பகுதிகளில் சுற்றித்திரியும் யானைக்கு, மதம் பிடித்து உள்ளது. தெருவிளக்கு வெளிச்சத்திற்கு கீழே நிறுத்தப்பட்டு இருந்த கார்களில் உள்ள கண்ணாடி பளபளவென மின்னியதால் சேதப்படுத்தி உள்ளது.

அங்கு 2 குழுக்கள் அமைத்து வாகனத்தில் ரோந்து சென்று யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதம் குறைந்ததும் யானை தானாகவே சென்று விடும். தற்போது தொந்தரவு செய்தால் மேலும் ஆக்ரோஷம் அதிகரிக்கும். எனவே நவமலைக்கு இரவு நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். பகல் நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்