வால்பாறையில் மரத்தில் பலாக்காய்களை பறித்து தின்ற காட்டு யானை

வால்பாறையில் மரத்தில் பலாக்காய்களை பறித்து காட்டு யானை தின்றது.

Update: 2023-04-18 13:38 GMT

வால்பாறை

வால்பாறையில் மரத்தில் பலாக்காய்களை பறித்து காட்டு யானை தின்றது.

காட்டு யானை

வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் வரத் தொடங்கிய காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிகளுக்கு மீண்டும் செல்லத் தொடங்கி விட்டது.இதனால் கேரள வனப் பகுதியை ஒட்டிய எஸ்டேட் பகுதிகளான பன்னிமேடு, சேக்கல்முடி, ஹைபாரஸ்ட், நல்லமுடி, அக்காமலை புல்மேடு மற்றும் குரங்குமுடி எஸ்டேட் பகுதிகளில் மட்டும் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. வால்பாறை பகுதியில் தற்போது காட்டு யானைகளை பார்ப்பது அறிதாகி விட்டது. ஒருசில எஸ்டேட் பகுதியில் ஒற்றை யானைகள் மட்டும் ஆங்காங்கே சுற்றித்திரிந்து வருகிறது.

பலாக்காய்களை தின்றது

இந்த நிலையில் வால்பாறை அருகில் முருகன் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப் பகுதியில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது தேயிலை தோட்ட பகுதி வழியாக நடந்து சென்றது. இதைப் பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண் யானை தொழிலாளர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் தேயிலை தோட்ட பகுதியில் இருந்த பலாமரங்களில் இருக்கும் பலாக்காய்களை மரத்தின் மீது கால் வைத்து தாவி பறித்து தின்றது. மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் முருகன் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் எஸ்டேட் பகுதி மக்கள் இரவில் கவனமாக இருக்க வேண்டும் என்று வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்