அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானை
அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே படச்சேரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மற்றும் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். இந்த பயிர்களை காட்டு யானைகள் மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் படச்சேரியில் 2 காட்டு யானைகள் புகுந்து, குடியிருப்புகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து தேவதாஸ் என்பவரது தோட்டத்தில் நெல்லிக்காய் மரத்தை வேரோடு சாய்த்தது. மேலும் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை பகுதியில் காட்டு யானை புகுந்தது. நேற்று அதிகாலை 5 மணியளவில் எலியாஸ் கடை பகுதியில் அரசு பஸ்சை யானை வழிமறித்தது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். டிரைவர் சற்று தொலைவில் பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தினார். சிறிது நேரத்துக்கு பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர்.