வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை

நாடுகாணி அருகே வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது. அங்கு சாலை வசதி இல்லாததால் வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட முடியாமல் தவித்தனர்.

Update: 2023-08-04 19:00 GMT

கூடலூர்

நாடுகாணி அருகே வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது. அங்கு சாலை வசதி இல்லாததால் வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட முடியாமல் தவித்தனர்.

சாலை வசதி இல்லாத கிராமம்

கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே முன்டக்குன்னு ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட தூரம் மட்டுமே சாலை வசதி உள்ளது. அதன் பின்னர் ஆற்றுவாய்க்கால் மீது கட்டப்பட்ட பாலம் இருக்கிறது. தொடர்ந்து 500 மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லை. சிறிது தூரம் உள்ள சாலையும் மழையால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகனங்களை இயக்க முடியாது. இதன் காரணமாக பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அங்கு சாலை வசதி கோரி நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கிராமத்துக்குள் காட்டு யானை புகுந்தது. பின்னர் விவசாயி ஆனந்த் என்பவர் வீட்டை முற்றுகையிட்டது. இதனால் ஆதிவாசி மக்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வாழைகள் சேதம்

பின்னர் காட்டு யானை வீட்டின் கதவை தும்பிக்கையால் தள்ளி உடைத்தது. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசி சேதப்படுத்தியது. இதை சற்றும் எதிர்பாராத ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் பயத்தில் கூச்சலிட்டனர். மேலும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரவு நேரம் என்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் வனத்துறையினர் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வர முடிந்தது.

தொடர்ந்து செல்ல முடியாதவாறு வாகனத்தில் தவித்தனர். இதே போல் காட்டு யானையும் விவசாயி வீட்டை சுற்றி வந்தவாறு அங்கு நின்றிருந்த தென்னை மரத்தை சாய்த்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி விவசாயி குடும்பத்தினர் வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர். தொடர்ந்து அதிகாலை 4.30 மணி வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை, அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக விவசாயி குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்