சோலார் மின்வேலியை சேதப்படுத்திய காட்டுயானை

ஆடலூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.

Update: 2023-07-26 20:00 GMT

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பெரியூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக 3 காட்டுயானைகள் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த யானைகள் கூட்டமாக இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அந்த பகுதியில் சாலையை மறித்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் கானல்காடு அருகே ராமர் கோவில் வலவு என்னும் பகுதியில் நேற்று ஒற்றை யானை பஸ், லாரி போன்ற வாகனங்களை செல்ல விடாமல் சாலையில் நின்றது. சுமார் அரை மணி நேரத்துக்கும் பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து சீரானது. ஆடலூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது. தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் உலா வரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வனஅலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்