சரக்கு வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை
சரக்கு வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரக்கோடு ஊராட்சியில் பங்களாபாடிகை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர் பங்களாபாடிகைக்கு சென்றார். கிராமத்திற்கு செல்லும் வழியில் காட்டு யானை ஒன்று சரக்கு வாகனத்தை வழிமறித்தது. அப்போது அபுதாகீர் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்துக்கு ஓடியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் யானை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. மேலும் சரக்கு வாகனத்தை கவிழ்த்ததுடன், அதில் இருந்த காய்கறிகளை தின்று சேதப்படுத்தி விட்டு சென்றது. இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பழங்குடியின மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.