சரக்கு வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை
ஓவேலி எல்லமலையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கூடலூர்
ஓவேலி எல்லமலையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த சரக்கு வாகனத்தை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
காட்டு யானைகள் முகாம்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ், எல்லமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் முகாமிட்டு வருகின்றன.
இந்தநிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பசுமை நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காட்டு யானை ஊருக்குள் நுழைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் பீதியுடன் வீடுகளுக்குள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த டொமினி என்பவர் தனது சரக்கு வாகனத்தை வீட்டின் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார்.
சரக்கு வாகனத்தை நொறுக்கியது
இதைத்தொடர்ந்து காட்டு யானை சரக்கு வாகனத்தை உடைத்து நொறுக்கியது. இதில் வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது. தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களாக காட்டு யானையின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது யானைகள் பல இடங்களில் முகாமிட்டு உள்ளன. இதில் சில யானைகள் ஊருக்குள் வந்து மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.