50 தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானை
பொள்ளாச்சி அருகே 50 தென்னை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே 50 தென்னை மரங்களை காட்டுயானை சேதப்படுத்தியது.
தென்னை மரங்கள் சேதம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. இதை தொடர்ந்து ஆழியாறு அணை பகுதியில் முகாமிட்டு இருந்தது.
இதற்கிடையில் நள்ளிரவு வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்திற்குள் யானை புகுந்தது. பின்னர் அங்கிருந்த தென்னை மரங்களை நாசம் செய்தது. இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 50 தென்னை மரங்களை யானை சேதப்படுத்தி உள்ளது.
வனத்துறையினர் கண்காணிப்பு
அதன்பிறகும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் வால்பாறை சாலையையொட்டி அணைப்பகுதியில் நின்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஆழியாறு, நவமலை பகுதியில் மதம் பிடித்த நிலையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. வால்பாறைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். யானையின் அருகில் செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றனர்.