சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்ற காட்டு யானையை சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது அவர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-22 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்ற காட்டு யானையை சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது அவர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து 6 காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன. அவை அவ்வப்போது சாலைகளில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் முள்ளூர் பகுதியில் காட்டு யானை சாலையை கடக்க முயன்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். ஆனால், சுற்றுலா பயணிகள் சிலர் கீழே இறங்கி காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்ததுடன், சத்தம் போட்டு உள்ளனர். இதனால் மிரண்டு போன யானை சுற்றுலா பயணிகளை சிறிது தூரம் துரத்தியது. இதை கண்ட அவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

வழித்தடத்தில் கம்பிவேலி

அதன் பின்னர் காட்டு யானை சாலையை கடந்து, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது, முள்ளூர் பகுதியில் காட்டு யானைகள் சாலையை கடப்பது வழக்கம். அந்த இடம் யானைகளின் வழித்தடமாகும். இங்கு தனி நபர் நிலத்தை வாங்கி 20 அடி உயரத்திற்கு கம்பிவேலி அமைத்து, யானைகள் வழித்தடத்தை தடுத்து உள்ளார்.

இதனால் யானைகள் சற்று தொலைவிற்கு சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, வனத்துறையினர் யானைகளுக்கு இடையூறாக வழித்தடத்தை மறைத்து அமைக்கப்பட்டு உள்ள கம்பிவேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாடினால், யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்