வீட்டை உடைத்த காட்டு யானை

வீட்டை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-28 18:45 GMT

கூடலூர்,

கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல், சில்வர் கிளவுட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கேரள சுற்றுலா பயணிகள் பலர் சில்வர் கிளவுட் பகுதியில் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்தனர். அப்போது அப்பகுதிக்கு காட்டு யானை வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து காட்டு யானை சாலையை கடந்து தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது.

பின்னர் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் தங்களது வாகனத்தில் ஏறி அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியில் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரது வீட்டை முற்றுகையிட்டது. சிறிது நேரத்தில் வீட்டின் சுவரை காட்டு யானை உடைத்து தள்ளியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். தொடர்ந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்