தோட்டத்தில் புகுந்து காட்டுயானை அட்டகாசம் -200 வாழைகள் நாசம்
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசமாகின.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்ததில் 200 வாழைகள் நாசமாகின.
உணவு-தண்ணீர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனச்சரகங்களில் மான், சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வருகின்றன. அவ்வாறு வெளியேறும் காட்டுயானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும் அங்கு உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
200 வாழைகள் நாசம்
இந்தநிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட தாளவாடி நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லூ (வயது 45). விவசாயி. இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை இவருடைய வாழைத்தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு இருந்த வாழை மரங்களை துதிக்கையால் முறித்தும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்த தொடங்கியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு எழுந்த விவசாயி மல்லூ, வாழை மரங்களை காட்டுயானை நாசம் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் விவசாயிகள் ஒன்று திரண்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானையை விவசாயிகள் விரட்டியடித்தனர். இதில் 200 வாழை மரங்கள் நாசமாகின.
உரிய இழப்பீடு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'அடர்ந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள் வெளியேறி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் நாங்கள் பெரிதும் சிரமப்படுகிறோம்.
காட்டுயானைகள் அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை நாசம் செய்வதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறாதவாறு அகழி அமைக்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்' என்றனர்.