21-ந்தேதி தொடங்குகிறது சென்னை தினம் ஒரு வாரம் கொண்டாட்டம்

சென்னை தினம் வருகிற 21-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது.

Update: 2023-08-18 19:17 GMT

சென்னை,

வரலாற்று ஆய்வாளர் மறைந்த முத்தையா, ஸ்ரீராம், பத்திரிகையாளர் வின்சென்ட் டி சோஸா, சத்தியன் பட் உள்ளிட்ட சென்னை வரலாற்றின் ஆர்வலர்கள் 2004-ம் ஆண்டில் 'மெட்ராஸ் டே' கொண்டாட ஆரம்பித்தனர். அதன் பிறகு இன்று வரை இந்த கொண்டாட்டம் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 22-ந்தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறிவிட்டதால் இதை 'சென்னை தினம்' என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு வார காலம் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளில் சொற்பொழிவுகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கட்டிடங்களை நடை பயணமாக சென்று பார்வையிடுவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் வருகிற 22-ந்தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது.

நடைபயணம், சொற்பொழிவுகள்

இதுகுறித்து நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீராம், வின்சென்ட் டி சோஸா, மோகன்வி.ராமன், சத்தியன் பட் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சென்னை தினத்தையொட்டி 21-ந்தேதி (திங்கட்கிழமை) அண்ணா சாலையில் உள்ள பார்க் ஓட்டலில் 1940 மற்றும் 1950-ம் ஆண்டுகளில் தேவன் மற்றும் அவரது படைப்புகளின் பார்வையில் சென்னை பற்றி ஜெயராமன் ரகுநாதன் பேசுகிறார். மறுநாள் (22-ந்தேதி) சென்னை ஓயிட் ரோட்டில் உள்ள அமிதிஸ்ட் ஓட்டலில் 'உலாவுதல் மூலம் சமூக மாற்றம்' என்ற தலைப்பில் அருண் வாசு பேசுகிறார்.

23-ந்தேதி எம்.கே.ரெங்கசாமி அய்யங்கார் கடந்த1930-ம் ஆண்டு சென்னையில் எடுத்த புகைப்படங்களை சேமியர்ஸ் சாலையில் அவருடைய குடும்பத்தினர் காட்சிப்படுத்துகின்றனர். டாக்டர் சித்ரா மாதவன் முழுவிளக்கம் அளித்து பேசுகிறார். 24-ந் தேதி சவேரா ஓட்டலில் 'சென்னைக்கு கோடாக் பிலிம் வந்த கதை' குறித்து ராஜூ ஈஸ்வரன் பேசுகிறார்.

காதலிக்க நேரமில்லை

அதற்கு மறுநாள் (25-ந்தேதி) கோட்டூர்புரத்தில் உள்ள 'வெட்டிங் ஆண்டு மாரிகோல்ட் ஸ்டுடியோ'வில் வி.ஸ்ரீராம், 'பின்கோடுகள் என்னை இணைத்தது' என்ற தலைப்பில் பேசுகிறார். தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காதலிக்க நேரமில்லை திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டி அதுதொடர்பாக மோகன் வி.ராமன் பேசுகிறார். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனா ஸ்ரீதர், படத்தில் நகைச்சுவை காட்சிகளை எழுதிய சித்ராலயா கோபு, படத்தில் நடித்த நடிகை சச்சு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

27-ந்தேதி தேனாம்பேட்டை, போயஸ் கார்டனில் உள்ள ஹனு ரெட்டி வீட்டில் சென்னை மற்றும் தமிழகத்தின் டிஜிட்டல் மாற்றம் குறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி எஸ்.மகாலிங்கம் பேசுகிறார். அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை நடக்கிறது. இதுதவிர பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்