காவிரி ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
காவிரி ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
கும்பகோணம் அருகே காவிரி ஆற்றின் கரையோரத்தில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு அலுவலகங்கள்
கும்பகோணம் பகுதியில் வழியே செல்லும் காவிரி ஆற்றின் பாலக்கரை பகுதி கும்பகோணம் நகரின் நுழைவாயிலாக திகழ்கிறது. பல வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பாலக்கரை பகுதி வழியாகவே கும்பகோணம் நகருக்குள் வந்து செல்கின்றன. காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் அரசு கல்லூரி, மருத்துவமனை, நீதிபதிகள் குடியிருப்பு, கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரைகளில் சக்கரப்படித்துறை, பகவத் படித்துறை உள்ளிட்ட படித்துறைகள் அமைந்துள்ளன. இதில் ஏராளமான திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் திதி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த பகுதி அருகே பழைய காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் மக்கள் எப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
இந்த பகுதியில் உள்ள பகவத் படித்துறை அருகே காவிரி ஆற்றின் கறையில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த வெளியில் காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் ஆற்றின் கரையோரம் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆற்றின் கரையோரம் செல்லும் வாகனங்களின் எடை தாங்காமல் ஆற்றின் கரை உடைந்துவிடும் அபாயமும் நிலவுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் காவிரி ஆற்றின் கரையை பலப்படுத்தி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.